கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை அதிகபட்சமாக நெய்வேலியில் 14 செ.மீ. பதிவு
கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது, இதில் அதிகபட்சமாக நெய்வேலியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவானது.
கடலூர்,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. கஜா என பெயரிடப்பட்ட இந்த புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே நேற்று அதிகாலையில் கரையை கடந்தது. ஆனால் வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்ற தெரிவித்திருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்தது. மீட்பு பணிக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புகுழுவினர், தீயணைப்புதுறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். இரவிலும் அரசு அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணியில் இருந்தனர்.
ஆனால் கஜா புயல் நாகைக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்ததால், கஜாவின் தாக்குதலில் இருந்து கடலூர் மாவட்டம் தப்பியது. எனினும் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது.
இதனால் முன்எச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாவட்டமே இருளில் மூழ்கியது. சுழற்றி அடித்த சூறாவளி காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அவற்றை பேரிடர் மீட்பு படையினர் அப்புறப்படுத்தினர். கடலூரில் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அந்த இடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சென்று மழைநீரை வடிய வைத்தனர்.
கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம், பனங்காட்டு காலனி, தைக்கால்தோணித்துறை, பச்சையாங்குப்பம் உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றதை காண முடிந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.
இதேபோல் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
விருத்தாசலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஹெக்டர் விவசாய நிலங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சூறாவளி காற்றால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. பெண்ணாடம் பகுதியில் கரும்பு பயிர்கள் சாய்ந்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக நெய்வேலி வடக்குத்தில் 14.6 சென்டி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 77.53 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
குறிஞ்சிப்பாடி - 128
குப்பநத்தம் - 120
விருத்தாசலம் - 118
கொத்தவாச்சேரி - 109
மேமாத்தூர் - 101
பெலாந்துறை - 98.20
வேப்பூர் - 92
காட்டுமயிலூர் - 90
கீழ்செருவாய் -79
ஸ்ரீமுஷ்ணம் - 74.20
வானமாதேவி - 73
சேத்தியாத்தோப்பு - 66
தொழுதூர் - 65
கலெக்டர் அலுவலகம் - 62.80
பரங்கிப்பேட்டை - 62
அண்ணாமலைநகர் - 58.80
சிதம்பரம் - 54.1
புவனகிரி - 51
லக்கூர் - 47
குடிதாங்கி - 45
லால்பேட்டை - 42.60
காட்டுமன்னார்கோவில்
- 40
பண்ருட்டி - 38
Related Tags :
Next Story