திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே ‘ஹெரிடேஜ் ரெயில்’ இன்று இயக்கம்


திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே ‘ஹெரிடேஜ் ரெயில்’ இன்று இயக்கம்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:30 PM GMT (Updated: 16 Nov 2018 5:34 PM GMT)

திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே ‘ஹெரிடேஜ் ரெயில்’ இன்று (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.

திருச்செந்தூர், 

இந்திய ரெயில்வே சார்பில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பழமையான நீராவி என்ஜினைக் கொண்டு, ‘ஹெரிடேஜ் ரெயில்’ இயக்கப்படுகிறது. இந்த நீராவி என்ஜினானது கடந்த 1855-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ‘பெய்ரி குயீன் இ.ஐ.ஆர்.21‘ ரகத்தைச் சேர்ந்தது. 163 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த என்ஜின், கிழக்கு ரெயில்வேயில் சுமார் 50 ஆண்டுகள் ஓடியது.

கடந்த 1909-ம் ஆண்டு தனது பயணத்தை முடித்த இந்த என்ஜின் பின்னர் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்திலும், ஜமல்பூர் பணிமனையில் உள்ள அருங்காட்சியகத்திலும் இருந்தது. பின்னர் அதனை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ரெயில் என்ஜின் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு வந்து, பழுது நீக்கப்பட்டு, தற்போது ‘ஹெரிடேஜ் ரெயிலாக’ இயக்கப்படுகிறது.

இந்த ‘ஹெரிடேஜ் ரெயில்’ சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் இடையிலும், புதுச்சேரியிலும் இயக்கப்பட்டது. தற்போது இந்த ஹெரிடேஜ் ரெயில் திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது. இதில் நீராவி என்ஜினுடன் குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. இதில் 35 பேர் பயணம் செய்யலாம்.

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலும் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலான பயண தூரம் 33 கிலோ மீட்டர் ஆகும். இதனை ஹெரிடேஜ் ரெயில் சுமார் 1½ மணி நேரத்தில் கடக்கிறது.

திருச்செந்தூரில் இருந்து புறப்படும் இந்த ரெயிலானது இடையில் எந்த ரெயில் நிலையத்திலும் நிற்காது. இந்த ரெயில் நிலக்கரி மூலம் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய விரும்புகிறவர்கள் இன்று (சனிக்கிழமை) காலையில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு நேரில் வந்து பயணச்சீட்டு பெற்று கொள்ளலாம்.

இதேபோன்று வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கும் திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இந்த ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story