திருமங்கலம்-புளியரை 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


திருமங்கலம்-புளியரை 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:00 PM GMT (Updated: 16 Nov 2018 6:02 PM GMT)

திருமங்கலம்-புளியரை 4 வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் என நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்வேல்முருகன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் இதுவரை இயல்பான அளவைவிட 34 சதவீதம் அதிக மழை பெய்து உள்ளது. அணைகளில் 68 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. பிசான பருவத்தில் இதுவரை 2 ஆயிரத்து 544 ஹெக்டேரில் நெற்பயிரும், 12 ஆயிரத்து 899 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 27 ஆயிரத்து 477 ஹெக்டேரில் பயறு வகைகளும், 1,886 ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்பட்டுள்ளன. பிசான பருவத்திற்கு தேவையான விதைகள், உரங்கள் போதுமான அளவு உள்ளன.

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு, காப்பீடு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும்.

தாமிரபரணி-கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தில் தற்போது கால்வாய் அமைக்கும் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிலமதிப்பைவிட கூடுதலாக பணம் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பெரும்படையார், பழனிச்சாமி, சேக்மைதீன் ஆகியோர் பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அழித்து, பாலைவனமாக்கும் திருமங்கலம்-புளியரை 4 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. அந்த திட்டத்தை நிறைவேற்றினால் வளமாக உள்ள செங்கோட்டை, தென்காசி பகுதி பாலைவனமாக மாறும். மேலும் கருத்து கேட்கக்கூடிய அதிகாரிகள் அலுவலகம் நெல்லையில் அமைய வேண்டும்” என்றனர்.

இதற்கு பதிலளித்த கலெக்டர், “நீங்கள் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க வேண்டும். அடுத்த தலைமுறை நன்றாக இருக்கவேண்டுமானால் தொழிற்சாலைகள், 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் இருந்தால்தான் அடுத்த தலைமுறையினர் இங்கேயே வேலைக்கு செல்லமுடியும். இதை நீங்கள் கருத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

உடனே அனைத்து விவசாயிகளும் திருமங்கலம்-புளியரை 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவாக கலெக்டர் செயல்பட வேண்டும் என்று கூறி கோஷங்கள் போட்டனர்.

அப்போது கலெக்டர், “4 வழிச்சாலை திட்டத்திற்கான வருவாய் அலுவலர் அலுவலகம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும். நீங்கள் கொடுக்கின்ற கோரிக்கை மனுக்களை அரசுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்றார்.

பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

தெற்குமேடு விவசாயி செல்லத்துரை:- தனியார் உர நிறுவனங்களின் உரத்தின் விலை பட்டியல் வைக்கப்படவில்லை. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்களுக்கு கடந்த 6 மாதங்களாக பதில்கள் வருவதில்லை. வாழை பயிருக்கு பயிர்க்காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை எந்திரத்திற்கு அதிக வாடகை வசூல் செய்கிறார்கள். அரசே வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும்.

கலெக்டர்:- உரத்தின் விலை பட்டியல் வைக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதிகாரிகள் தனியார் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி கசமுத்து:- நெல்லை மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்த நெல்களை அப்படியே எடுத்த இடத்திலேயே அதிகாரிகள் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் மழையில் நெல் நனைந்து கெட்டுவிடும். எனவே, உடனடியாக நெல்லை அங்கிருந்து எடுத்து செல்லவேண்டும்.

பழனிச்சாமி:- நெல்லை மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ததற்கான பணத்தை ஆலை நிர்வாகம் வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை.

ஆலை அதிகாரி:- ஆலை மூடக்கூடிய நிலையில் உள்ளது. இருந்தாலும் விவசாயிகளின் நலன்கருதி ஆலையின் இதர சொத்துகளை விற்பனை செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்கி வருகிறோம். எங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியதற்கு அரசு பல கோடி ரூபாய் தரவேண்டி உள்ளது. அந்த பணமும் வரவில்லை.

உடனே விவசாயிகள், “அந்த ஆலைக்கு பள்ளிக்கூடம் மற்றும் இதர சொத்துக்கள் அதிக அளவில் உள்ளது. எனவே, அரசு அந்த ஆலை நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும்” என்றனர்.

கலெக்டர்:- கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நான் பலமுறை நிர்வாகத்திடமும், அரசு அதிகாரிகளிடமும் பேசி உள்ளேன். விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செந்தில்குமாரசாமி:- கருப்பாநதி அணையை விரிவாக்கம் செய்து அணையில் இருந்து வரும் தண்ணீரை வெள்ளாளங்குளம், ஊத்துமலை பெரியகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு வழங்கினால் பல ஏக்கர் நிலம் பாசனம் பெறும். வெள்ளாளங்குளத்தை பொதுப்பணித்துறை குளமாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய நிலங்களை அழிக்கும் மயில்களை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிகாரி:- கருப்பாநதி அணை விரிவாக்கம் குறித்து நீங்கள் கொடுத்த மனு தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறையின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு கோட்டத்திற்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தென்காசி வடகரை, கீழ்பிடாகை பகுதி மக்கள் திரளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திருமங்கலம்-புளியரை 4 வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story