வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்; வாகன ஓட்டிகள் அவதி


வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்; வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 6:49 PM GMT)

வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்; வாகன ஓட்டிவள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கள் அவதி

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ரெயில் வரும் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டி இருந்தது. இதனால் கேட் திறக்கும்போது வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்தது.

இதை தவிர்க்கும் வகையில், ரெயில்வே கிராசிங்கின் கீழே தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பால பணிக்காக 30 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டப்பட்டு காங்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலை வாகன போக்குவரத்துக்கு ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. அதன்படி வள்ளியூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் வாகனங்கள் தெற்கு வள்ளியூர் வழியாக செல்லவும், திருச்செந்தூர் பகுதியில் இருந்து வள்ளியூர் வரும் வாகனங்கள் அந்த ரோட்டின் வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பெய்த மழையால் பாலத்தின் தடுப்பு சுவரின் அருகில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மேலும் மண் சரிவு ஏற்படாமல் தடுக்க அந்த சாலை வழியாக போக்குவரத்தை வள்ளியூர் போலீசார் முற்றிலும் நிறுத்தினர். இதனால் ரெயில்வே கேட்டை ஊழியர்கள் அடைத்து வைத்துள்ளனர்.

இதன் காரணமாக, அந்த சாலை வழியாக வள்ளியூர் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தெற்கு வள்ளியூர் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பதிலாக சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story