மலைப்பாதைகளில் போக்குவரத்து துண்டிப்பு: ‘கஜா’ புயலின் கோரத்தாண்டவத்தால் தனித்தீவான கொடைக்கானல் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி


மலைப்பாதைகளில் போக்குவரத்து துண்டிப்பு: ‘கஜா’ புயலின் கோரத்தாண்டவத்தால் தனித்தீவான கொடைக்கானல் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:00 PM GMT (Updated: 16 Nov 2018 6:56 PM GMT)

‘கஜா‘ புயலின் கோரத்தாண்டவத்தால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மலைப்பாதைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தனித்தீவாக கொடைக்கானல் காட்சி அளிக்கிறது. கார் மீது மரம் முறிந்து விழுந்ததால் சுற்றுலா வந்த பெண் பலியானார்.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல், கஜா புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த புயலின் தாக்கம் கொடைக்கானலில் அதிகமாக இருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் சூறாவளி காற்று வீசியது. ஆனால் கொடைக்கானல் மட்டும் இதற்கு விதிவிலக்கானது.

‘கஜா‘ புயல் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கொடைக்கானலில் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. காலை 8.30 மணி அளவில் கஜா புயலின் கோரத்தாண்டவம் தொடங்கியது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது. காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் வானுயர்ந்த மரங்கள் எல்லாம் மண்டியிட்டன. கொடைக்கானல் நகரில் பாம்பார்புரம், எம்.எம்.தெரு, அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, கல்லறைமேடு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் 3 கார்கள் சேதமடைந்தன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மேல்பகுதியில் அமைக் கப்பட்டிருந்த சோலார் மின் தகடுகள் காற்றில் பறந்தன. மேல்மலை, கீழ்மலைக்கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையிலும் மரங்கள் முறிந்தன. பூம்பாறை-மன்னவனூர் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே மின்கம்பங்களும் மலைப்பாதைகளில் சாய்ந்தன. இதனால் காலை 8.30 மணி முதல் கொடைக்கானலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கொடைக்கானலில் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கன மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. கொடைக்கானல் ஒன்றிய பகுதியில் 25 வீடுகள் சேதம் அடைந்தன.

இதேபோல் வத்தலக்குண்டு மலைப்பாதை, பழனி மலைப்பாதை மற்றும் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதை என அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து இன்றி தனித்தீவு போல கொடைக்கானல் மாறி விட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கொடைக்கானல் நகரவாசிகள் தவித்தனர். இதேபோல் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகளும் விடுதியிலேயே முடங்கினர்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து விட்டு சொந்த ஊருக்கு சென்ற காரில் சென்ற பெண் ஒருவர் மரம் விழுந்து பரிதாபமாக இறந்தார். அதன் விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொன்னத்துக்குன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெரின்ராஜ். இவர், அபுதாபியில் உள்ள எண்ணெய் கிணற்றில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி நீலிமா (வயது 25). இவர்களுக்கு மாதவ் (2) என்ற மகன் இருக்கிறான். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெரின்ராஜ் தனது மனைவி, மகனுடன் காரில் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு அவர்கள் காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை ஜெரின்ராஜ் ஓட்டினார்.

கொடைக்கானல் கல்லறைமேடு என்னுமிடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்ற ஒரு ராட்சதமரம் திடீரென சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில், காருக்குள் சிக்கி கொண்ட 3 பேரும் அபயக்குரல் எழுப்பினர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் காரின் மீது விழுந்த மரத்தை அகற்ற முடியவில்லை.

இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த மரம் அகற்றப்பட்டது. ஆனால் காருக்குள்ளேயே நீலிமா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். காயங்களுடன் ஜெரின்ராஜ், மாதவ் ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் வெள்ளிநீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் கொடைக்கானலில் உள்ள பிற நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் உயரம் 21 அடி ஆகும். ஒரே நாளில் 4 அடி உயர்ந்து, தற்போது 18 அடி தண்ணீர் உள்ளது. இதேபோல் 36 அடி உயரம் கொண்ட மனோரஞ்சிதம் அணையின் நீர்மட்டம் 26 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 61 மில்லி மீட்டர் மழையும், போர்ட்கிளப்பில் 52.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே கொடைக்கானல் பகுதியில் சீரமைப்பு பணியில் பல்வேறு துறை அதிகாரிகள் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் சீரமைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

கொடைக்கானல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சிவக்குமார், நகராட்சி ஆணையர் முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, தாசில்தார் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதியில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணி முடிந்து மின்சார வினியோகம் செய்ய ஓரிரு நாட்கள் ஆகலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story