பேரிடர்களால் பாதிக்கப்படும்போது நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக தருவதில்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
‘பேரிடர்களால் பாதிக்கப்படும் போது நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக தருவதில்லை‘ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ‘கஜா’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் 8 அடியாக இருந்த ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. இந்த புயலால் மாவட்டம் முழுவதும் 86 குடிசைகள் முழுவதும், 380 குடிசைகள் பகுதியும் சேதமடைந்துள்ளன. முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100-ம் வழங்கப்படும்.
மேலும், மரம் விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இதற்கு முன்பு வரை ரூ.4 லட்சமாக வழங்கப்பட்டு வந்த இந்த நிதி, தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 6 கால்நடைகள் இறந்துள்ளன. நிவாரணமாக பசுமாடு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம், கன்றுக்குட்டிக்கு ரூ.16 ஆயிரம், ஆடுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.
புயலால் மாவட்டம் முழுவதும் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானல் தான் அதிக அளவு பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள மண்சரிவு சரி செய்யப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 40 சதவீதம் மின் வினியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் சேதம் குறித்து கணக்கெடுத்து, அதற்கான நிவாரண நிதியும் வழங்கப்படும்.
‘கஜா’ புயலை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சியினரும் பாராட்டி உள்ளனர். இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ள நிவாரண நிதியை முழுமையாக தருவதில்லை.
தமிழக அரசு, மாநில நிதியில் இருந்து தான் நிவாரணம் வழங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்று நான் பார்வையிடுகிறேன். இதேபோல், நாகை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட என்னையும், மேலும் 4 அமைச்சர்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story