மாவட்ட செய்திகள்

கோவை அருகே விபத்து கார் மோதி மாணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு + "||" + 3 killed in car collision

கோவை அருகே விபத்து கார் மோதி மாணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு

கோவை அருகே விபத்து கார் மோதி மாணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு
கோவை அருகே கார்மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள்.

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி என்.ஜி.ஜி.ஒ.காலனியை சேர்ந்தவர் ஹனீபா. இவரது மகன் சல்மான்கான் (வயது 17). இவரது நண்பர்கள் பொள்ளாச்சி அண்ணா வீதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் ரத்தினமூர்த்தி (16), மற்றும் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி வ.உ.சி.வீதியை சேர்ந்த மனோகர் என்பவரது மகன் நாகேந்திரபாரதி (19). இவர் ஜமீன்கோட்டாம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக்கில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் ராஜூ (15) சமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மற்றொரு நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் பாபு (19) ஓட்டல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சல்மான்கானின் தந்தை ஹனீபா கிணத்துக்கடவு பகுதியில் புதிதாகவீடு கட்டிவந்தார். இதனால் சல்மான்கான் அந்த வீட்டை நண்பர்களுக்கு காண்பிக்க விரும்பினார். இது குறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு கிளம்பினர். இதில் ஒரு மோட்டார் சைக்கிளை சல்மான்கான்ஓட்ட, அவரது பின்னால் ரத்தின மூர்த்தியும், மற்றொரு மோட்டார் சைக்கிளை நாகேந்திர பாரதி ஓட்ட, அவரது பின்னால் ராஜூ, பாபு ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் கிணத்துக்கடவுக்கு வந்து அந்த புதிய வீட்டை பார்த்தனர். பின்னர் மதியம் அதே மோட்டார் சைக்கிள்களில் பொள்ளாச்சிக்கு திரும்பினர்.

இதில் சல்மான்கானும், ரத்தின மூர்த்தியும் மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்று கொண்டிருந்தனர். மற்ற 3 பேரும் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். பொள்ளாச்சி– கிணத்துக்கடவு 4 வழிச்சாலையில் தாமரைக்குளம் பகுதியில் வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் நாகேந்திரபாரதி ஓட்டிவந்த மோட்டார் சைக் கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் 10 மீட்டர் தூரத்துக்கு சாலையில் இழுத்து சென்று விழுந்தது. இதில் நாகேந்திர பாரதி உள்பட 3 பேரும் காருக்கு அடியில் சிக்கி, உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர்.

இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் இது குறித்த தகவலின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் 3 பேரின் உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் வந்து பார்வையிட்டார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடுமலை பூலாங்கிணரை சேர்ந்த தங்கவேல் (58) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த விபத்தில் சிக்கிய 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. ஹெல்மெட் அணிந்து வந்து இருந்தால் உயிர்சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என்றனர்.

இதற்கிடையில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற சல்மான்கானும், ரத்தின மூர்த்தியும் பின்னால் வந்து கொண்டிருந்த நண்பர்களை காணவில்லை என்று திரும்பி வந்து பார்த்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் கார் மோதி பலியானதை பார்த்து கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆசிரியரின் தேர்வுகள்...