அரியலூரில் ‘கஜா’ புயலால் மரங்கள் சாய்ந்தன போக்குவரத்து பாதிப்பு


அரியலூரில் ‘கஜா’ புயலால் மரங்கள் சாய்ந்தன போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 3:36 AM IST (Updated: 17 Nov 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் ‘கஜா’ புயலால் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்,

‘கஜா’ புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் போது பலத்த காற்று மற்றும் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில் ‘கஜா‘ புயலால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சூறைக்காற்று வீசியது. இரவு 11 மணியில் இருந்து கனமழை பெய்யத்தொடங்கியது. மேலும் இரவு 1 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக்காற்றினால் நகரின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், மரங்கள் முறிந்து விழுந்தன. அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல் லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இதேபோல் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தினால் பல இடங்களில் நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றில் பலவிதமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், ஜெயங்கொண்டம் சீனிவாசநகரில் வீடு ஒன்றிலும், உட்கோட்டை, கொக்கரணை கிராமத்திலும் சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. இதேபோல் உத்திரக்குடி வயல்வெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மரங்களும் விழுந்துள்ளது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்தினர்.

திருச்சி- சிதம்பரம் சாலையில் நேற்று அதிகாலையில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று காலை வரை லேசான மழை பெய்து வந்த நிலையில் காலை 10 மணிக்கு பின்னர் ஜெயங்கொண்டத்தில் மழை நின்று இயல்பு நிலை திரும்பியது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.

கஜா புயலினால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் சில சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. மின்கம்பங்களும் சேதமடைந்தன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணியையும், மின்கம்பங்கள் சரிசெய்யும் பணியையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சேதமடைந்த மின்கம்பங்கள், மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை துரிதமாக முடிக்கவும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரினை வெளியேற்றவும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மின்சாரத்துறை அலுவலர்களுக்கு மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்ட இடங்களை உடனடியாக ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்திட கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story