ராஜபாளையத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்


ராஜபாளையத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
x

ராஜபாளையத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சி சார்பில், பல்வேறு வழிகளில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து, பஸ் நிலையங்களில் மக்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் இடங்கள் மற்றும் பஸ்களில் மக்கள் கைபடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கின.

இந்த பணிகளை வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். காய்ச்சல் பாதித்த ஒருவர் கை வைத்த இடத்தில் உள்ள தொற்று நோய் கிருமி மூலம் மற்றொருவருக்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க இந்த வழிமுறையை கையாள்வதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பன்றிக்காய்ச்சல் உருவாகும் முறைகள் குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பயணிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story