கஜா புயல்: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் சாவு


கஜா புயல்: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் சாவு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:25 PM GMT (Updated: 16 Nov 2018 11:25 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் பலியாயினர்.

பட்டுக்கோட்டை,

கஜா புயலின்போது தனியாக இருந்த பாட்டியை பாதுகாப்பாக அழைத்து வரச்சென்ற சகோதரர்கள் 4 பேர், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்கள்.

பட்டுக்கோட்டை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் புயல் காற்று வீச தொடங்கியது. காற்று வீச தொடங்கிய சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து சுழன்று, சுழன்று அடித்தது.

111 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பட்டுக்கோட்டை நகரிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சகோதரர்கள் 4 பேர் பலியானார்கள். இதுகுறித்த விவரம் வருமாறு:-

பட்டுக்கோட்டை சிவக்கொல்லை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா(45), இவர்களது மகன்கள் சதீஷ்குமார்(22), ரமேஷ்குமார்(20), தினேஷ்குமார்(18), மல்லிகாவின் அக்காள் மகன் நாடியத்தை சேர்ந்த அய்யாத்துரை(19).

இவர்களது பாட்டி ராஜம்மாள்(65) அந்த பகுதியில் உள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் பாட்டியை தங்களது வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அவர் வசித்து வந்த வீட்டிற்கு சதீஷ்குமார், ரமேஷ்குமார், தினேஷ்குமார், அய்யாத்துரை ஆகிய 4 பேரும் சென்றனர். அங்கு சென்ற அவர்கள், ராஜம்மாளை தங்களுடன் வருமாறு அழைத்தனர். அந்த நேரத்தில் ராஜம்மாள் வசித்து வந்த வீட்டின் சுவர் இடிந்து வீட்டுக்குள் நின்று கொண்டு இருந்த சகோதரர்கள் 4 பேர் மீதும் விழுந்து அமுக்கியது. இதில் அந்த இடத்திலேயே 4 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாட்டியை பாதுகாப்பாக அழைத்து வர சென்ற சகோதரர்கள் 4 பேரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story