4 ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாத சட்டசபை
மராட்டிய சட்டசபைக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதையடுத்து அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜனதா, ஆட்சியை அமைத்தது.
மும்பை,
2014-ம் ஆண்டில் அக்டோபர் 31-ந் தேதி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அரசு பதவி ஏற்றது. பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் சிவசேனா பா.ஜனதா அரசில் கூட்டணி சேர்ந்தது. சட்டசபையில் சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த ஹரிபாவு பாகடே பதவி வகித்து வருகிறார். ஆனால் பா.ஜனதா அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் துணை சபாநாயகர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. துணை சபாநாயகர் இல்லாமலேயே சட்டசபை 4 ஆண்டுகளாக செயல்படுவதை அரசியல் ேநாக்கர்கள் விமர்சித்து உள்ளனர்.
மராட்டியத்தில் இது 13-வது சட்டசபையாகும். இதுவரை 22 துணை சபாநாயகர்கள் பதவி வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. மராத்தா மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் மராட்டியத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகள் தற்கொலை, அவ்னி புலி சுட்டுக்கொலை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் சட்டசபையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
Related Tags :
Next Story