விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் : துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு


விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் : துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு
x
தினத்தந்தி 17 Nov 2018 12:05 AM GMT (Updated: 17 Nov 2018 12:05 AM GMT)

கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் பெங்களூருவில் விவசாய கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது:-

சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம். இந்த முறை பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு வறட்சி நிவாரண பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கு புதிதாக 184 வகையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகத்தில் நானும் படித்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். முந்தைய காலங்களில் உணவு தானியங்களை நமது நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் இன்று நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறோம். இன்னும் ஏராளமான சாதனைகள் செய்ய வேண்டியது உள்ளன. இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

விவசாயிகள் ஆர்வமாக விவசாய பணிகளை மேற்கொண்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த வகையில் பங்களிப்பை அளிக்க முடியும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

Next Story