புயல் சேத மதிப்பை அதிகாரிகள் கணக்கெடுப்பார்கள் - காரைக்காலில் நாராயணசாமி பேட்டி


புயல் சேத மதிப்பை அதிகாரிகள் கணக்கெடுப்பார்கள் - காரைக்காலில் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 17 Nov 2018 12:12 AM GMT)

கஜா புயலால் ஏற்பட்ட சேத மதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பார்கள் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

கஜா புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

அதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று பகல் காரைக்காலுக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி ஆகியோரும் காரைக்கால் வந்தனர்.

முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு ஆட்சியர் விக்ராந்த் ராஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் கடலோர மீனவ கிராமமான காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு சென்று கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியைக் காட்டிலும் புயலால் காரைக்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சில மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. புயலால் கடற்கரையையொட்டி நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதமாகிவிட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வேரோடு சாய்ந்த மரங்களை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நிவாரண பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் உரிய அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புயல் சேத விவரமும் நிவாரணம் குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும்.

கஜா புயலால் கடலோர கிராமத்தில் நிறுத்தி இருந்த பல படகுகள் தூக்கியெறியப்பட்டுள்ளன. மீனவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர் பகுதியில் பல வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. விளை நிலங்களில் மழைநீர் புகுந்தாலும் பெரும் சேதம் இல்லை. இருந்த போதிலும் புயல்பாதிப்பு சேதம் குறித்து கணக்கெடுக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளேன். அவருடைய அறிக்கை வந்தவுடன் மத்திய அரசிடம் உரிய நிவாரணம் கேட்கப்படும் என்றார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Tags :
Next Story