செய்யாறு கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு


செய்யாறு கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2018 4:45 AM IST (Updated: 17 Nov 2018 9:14 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆய்வு செய்தார்.

செய்யாறு, 

செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் ரூ.86 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி செய்யாறு ஒருங்கிணைந்த கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கோர்ட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ராஜ்மோகன், சுந்தரபாண்டியன், ஜெயஸ்ரீ உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

வடமணப்பாக்கம் கிராமத்தில் மழையினால் வீடு இடிந்து விழுந்து பிரியாமணி (வயது 7) என்ற சிறுமி பலியானார். இதையறிந்த மாவட்ட முதன்மை நீதிபதி அந்த கிராமத்துக்கு சென்று குடிசை வீட்டினை பார்வையிட்டு உறவினர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். மேலும் அங்கிருந்தவர்களிடம் குடிசை வீடுகளில் தங்க வேண்டாம், அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெரும் துளசி என்பவரின் மனைவி லட்சுமி (37), மகள்கள் பிரியதர்ஷினி (15), தமிழ்பிரியா(3) ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த் துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் நிதியினை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் வழங்கினார்.

அப்போது செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், வெம்பாக்கம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Next Story