தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்


தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Nov 2018 3:45 AM IST (Updated: 17 Nov 2018 9:44 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள 50 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 40 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், மா உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் சானமாவு வனப்பகுதியில் இருந்த 40 காட்டு யானைகளையும் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த 40 காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநத்தம் வனப்பகுதிக்கு வந்தன. அங்கு ஏற்கனவே 10 யானைகள் உள்ளன.

அந்த யானைகளுடன் இந்த 40 காட்டு யானைகளும் சேர்ந்து கொண்டன. இதன் காரணமாக தற்போது பேவநத்தம் வனப்பகுதியில் 50 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. பின்னர் அவைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இந்த 50 காட்டு யானைகளையும் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Next Story