‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த ரூ.33 கோடி ஒதுக்கீடு தொல்லியல், மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் தெர
வேலூர், நவ.18–
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
வேலூர் கோட்டைவேலூர் நகரம், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் மூலம் வேலூர் நகரை பல்வேறு வசதிகளுடன் கூடிய சீர்மிகு வேலூராக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இத்திட்டத்தின் கீழ் வேலூர் நகரில் உள்ள சுற்றுலா தலங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.
வேலூர் நகரின் முக்கிய சுற்றுலா தலமாக வேலூர் கோட்டை திகழ்கிறது. இக்கோட்டை வரலாற்றிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இக்கோட்டையை அழகுப்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் திடீர் ஆய்வுஅதை தொடர்ந்து கோட்டையை அழகுப்படுத்த இந்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதன் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. இதன்மூலம் கோட்டையை பழமை மாறாமல் எவ்வாறு அழகுப்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் (சென்னை) சுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம், பொறியாளர் ஜெகதீஸ்வரன், வேலூர் கோட்டை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், மசூதி, தேவாலயப்பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வேலூர் மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரின் முக்கிய சுற்றுலா தலமாக வேலூர் கோட்டை திகழ்வதால் கோட்டையை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் 3 கட்டங்களாக செயல்படுத்த உள்ளோம். முதல்கட்டமாக சாதாரண பணிகளான கழிவறை, இருக்கைகள், பெயர் பலகைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளது.
ஜனவரியில் தொடக்கம்பின்னர் 2–வது கட்டமாக ஒப்புதல் பெற்று செய்யக்கூடிய பணிகளான லேசர் ஒளிவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளின் அச்சத்தை போக்க பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 3–வது கட்டமாக கோட்டையில் உள்ள பழங்கால கட்டிடங்களை சீரமைக்க உள்ளோம். இவை பழமை மாறாமல் சுற்றுலா பயணிகள் கட்டிடக்கலை குறித்து தெரிந்து கொள்ளவே அவ்வாறு சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. புதிய தலைமுறைக்கேற்ப அழகுப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.