‘கஜா’ புயலால் பாதிப்பு: புதுக்கோட்டைக்கு சுகாதார பணியாளர்கள் 100 பேர் அனுப்பி வைப்பு
‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டைக்கு, மீட்பு பணிக்காக சேலத்தில் இருந்து சுகாதார பணியாளர்கள் 100 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
சேலம்,
‘கஜா‘ புயலால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள் பலரும் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் மீட்புப்பணிகள் மேற்கொள்வதற்கு சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று 2 பஸ்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கோபி, ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் 100 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுகாதார பணியாளர்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமை தாங்கி பணியாளர்களுக்கு மரம் அறுக்கும் எந்திரங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு 25 எண்ணிக்கையிலான மரம் அறுக்கும் எந்திரங்கள், மீட்பு பணிக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவைகளும் கொண்டு செல்லப்படுகிறது. பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் மீட்புப்பணிகளை முழுமையாக முடித்த பின்னர் சேலம் திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் அசோகன், ரவி, காமராஜ், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவிப் பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், ரவிசந்தர், மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story