ஆயுதப்படை காவலரிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு: வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


ஆயுதப்படை காவலரிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு: வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 5:29 PM GMT)

சேலத்தில் ஆயுதப்படை காவலரிடம் மோட்டார் சைக்கிளை பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் கருப்பூர் அருகே ஓமலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 6-ந் தேதி நள்ளிரவு மாநகர ஆயுதப்படை காவலர் செல்லக்கண்ணு என்பவர் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக தீவட்டிப்பட்டி அருகே உள்ள நாச்சி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 23) என்பவர் தனது கூட்டாளிகள் 4 பேருடன் வந்தார். பின்னர் அவர்கள் செல்லக்கண்ணுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த கேரளாவை சேர்ந்த அகில்ஜான் மற்றும் அவருடைய நண்பர்களிடம் செல்வராஜ் உள்பட 4 பேர் வழிமறித்து ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கைக்கெடிகாரம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்கள், 12 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இவ்வாறு அன்று இரவு மொத்தம் 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர்.

இந்த வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக சூரமங்கலம், ஓமலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செல்வராஜ் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

Next Story