கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்


கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Nov 2018 11:00 PM GMT (Updated: 17 Nov 2018 5:32 PM GMT)

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற அரசு பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளை,

சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற இந்து கூட்டமைப்பு கேரள மாநில தலைவி சசிகலா சன்னிதானம் அருகே மரக்கூட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் சபரிமலை பாதுகாப்பு குழு, பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்று கேரளாவில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஓடவில்லை.

நாகர்கோவிலில் இருந்து கேரளாவின் தலைநகரமாகிய திருவனந்தபுரத்துக்கு தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் களிக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. இதுபோல், திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் கேரள அரசு பஸ்கள் எதுவும் வரவில்லை. இதனால், களியக்காவிளை பஸ் நிலையத்தில் கேரள அரசு பஸ்கள் வந்து நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், கேரளாவுக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதியடைந்தனர்.

களியக்காவிளையில் இருந்து கேரள பகுதியான பாறசாலை வழியாக பனச்சமூடு, கொல்லங்கோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் தமிழக பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக பனச்சமூடு செல்லும் பஸ்கள் மேக்கோடு வழியாகவும், கொல்லங்கோடு செல்லும் பஸ்கள் கோழிவிளை வழியாகவும் இயங்கின.

மாவட்டத்தின் எல்லை பகுதியான இஞ்சிவிளை வரை கேரள போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story