தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேச்சு


தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 17 Nov 2018 11:15 PM GMT (Updated: 17 Nov 2018 5:40 PM GMT)

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நாகர்கோவில் வந்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பெண்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். அப்போது கனிமொழி எம்.பி. முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று கனிமொழி எம்.பி. பேசியபோது கூறியதாவது–


மகளிர் அணியை வலிமைப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். தி.மு.க.வில் நீங்கள் தைரியமாக செயல்படலாம். உங்கள் குரல் கேட்கப்படும். உங்களது பணிகளுக்கு மரியாதை எப்போதும் இருக்கும். தற்போது என்ன நிலையில் தமிழ்நாடு இருக்கிறது? என்று உங்களுக்கு தெரியும்.

 ஒரு மத்திய மந்திரி இந்த மாவட்டத்தில் உங்கள் வாக்குகளை எல்லாம் பெற்றுள்ளார். இங்கு இணைந்துள்ள பலபேர் அவருக்கு வாக்குகள் சேகரிக்கக்கூட சென்றிருப்பீர்கள். அவருக்காக உழைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பா.ஜனதா ஆட்சியில் மத்திய மந்திரியால் ஏதாவது ஒரு பயன் ஏற்பட்டு இருக்கிறதா? இப்படிப்பட்ட ஒரு சூழல்தான் இங்கு இருக்கிறது.


இந்த மாவட்டத்தில் புயல் வந்தபோது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு மக்களுக்கான எந்த நிவாரணத்தையும் சரியாக வழங்கவில்லை. பெண்கள் எல்லா இடங்களிலும் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு சூழல், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சூழல், பள்ளி செல்லும் மாணவிகள் எந்த அளவு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? என்பது உங்களுக்கு தெரியும். மொத்தத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு சூழல் தமிழகத்தில் உள்ளது.

அதைவிடக்கொடுமை என்னவென்றால் காவல்துறையே தவறு செய்யக்கூடியவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை காப்பாற்றும் ஒரு நிலையிலேயே தமிழ்நாடு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த சூழலை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நிச்சயமாக விரைவில் தமிழகத்துக்கு ஒரு ஆட்சி மாற்றம் வரவேண்டும். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருபக்கம் மதம் என்ற பெயரால் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மதத்தை பயன்படுத்தி மக்களை பிரிக்கக்கூடிய ஒரு சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. சாதிகளுக்கு இடையே, மதங்களுக்கு இடையே ஒரு கிளர்ச்சி என்று வந்தால், அதில் அதிக அளவு பாதிக்கப்படப்போவது பெண்கள்தான்.அதனால் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இங்கு அமைதியான ஒரு சூழல், முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்கு ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சூழலுக்காக நீங்கள் உழைக்க வேண்டும். பெண்களுக்காக போராடக்கூடிய, பெண்களின் உரிமைகளை காக்கக்கூடிய, பெண்களை மதிக்கக்கூடிய திராவிட இயக்கத்தின் ஒரே அரசியல் வாரிசாக இருக்கக்கூடிய தி.மு.க.வுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் அத்தனை பேரையும் வருக, வருக என்று வரவேற்கிறேன். தொடர்ந்து நாம் மக்களுக்காக பணியாற்றுவோம். நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஒரு விடியல் விரைவிலே உதிக்கும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், மனோதங்கராஜ் (மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்), நகர செயலாளர் வக்கீல் மகேஷ், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story