நெல்லை அருகே 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்? உருக்கமான கடிதம் சிக்கியது; 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு


நெல்லை அருகே 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்? உருக்கமான கடிதம் சிக்கியது; 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 4:30 AM IST (Updated: 17 Nov 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே, 6 மாத குழந்தையை கொன்று விதவைப்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றிய உருக்கமான கடிதம் சிக்கியது. மேலும் அப்பகுதியில் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இட்டமொழி, நவ.18-

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள சடையநேரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கும், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்த சடையாண்டி மகள் பாலம்மாள் (வயது23) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய 6 மாத குழந்தை பாலகுமாரன்.

சண்முகசுந்தரத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் நோய்வாய்ப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். கணவர் இறந்ததும் பாலம்மாள் தனது குழந்தையுடன் பிள்ளையார்குளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு தனது சகோதரர்களின் பாதுகாப்பில் இருந்து வந்தார்.

கணவர் இறந்தது பாலம்மாளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர் தனது குழந்தையுடன் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்றார். அங்கு பாலம்மாள் தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின் னர் தான் கொண்டு வந்திருந்த கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வினுகுமார், ஜமால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணங்களை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த நிலையில் பாலம்மாள் இறந்த தகவல் அவரது சகோதரர் மணிகண்டனுக்கு (20) தெரியவந்தது. இவர் நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சகோதரி இறந்ததை கேள்விப்பட்டதும் உடனே அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி ஊருக்கு புறப்பட்டார். அந்த பஸ் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆட்களை ஏற்றி இறக்கி விட்டு மெதுவாக சென்றுள்ளது. இதனால் மணிகண்டன் பஸ்சை வேகமாக இயக்கக்கோரி டிரைவரிடமும், கண்டக்டரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார்.

அந்த பஸ் ரெட்டார்குளம் விலக்கு பகுதியில் உள்ள நிறுத்தத்தில் வந்தபோது, பஸ்சில் இருந்து இறங்கிய மணிகண்டன் கல்லால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் அந்த பஸ்சுக்கு பின்னால் அந்த மற்றொரு அரசு பஸ்சின் கண்ணாடியை கல்லால் தாக்கியுள்ளார். இதில் 2 பஸ்களின் கண்ணாடியும் உடைந்தன. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாலம்மாள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எழுதப்பட்டு இருந்ததாவது:-

எனது கணவர் இறந்த பின்னர் சடையநேரியில் உள்ள வீட்டை என்னுடைய பெயருக்கு எழுதி தருமாறு மாமியார் மகராசியிடம் கேட்டேன்.

ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக கடந்த 4-10-2018 அன்று நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசாரும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தேன். எனது பெயருக்கு வீட்டை எழுதி தராமல் மாமியார் என்னை ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.

பாலம்மாள் எழுதி வைத்திருந்த கடிதம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story