திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது பொதுமக்கள் உற்சாக பயணம்


திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது பொதுமக்கள் உற்சாக பயணம்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:45 AM IST (Updated: 18 Nov 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் பொருத்திய ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர்.

திருச்செந்தூர், 

இந்திய ரெயில்வே சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பழமையான நீராவி என்ஜினைக் கொண்டு ‘ஹெரிடேஜ் ரெயில்’ இயக்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட, 163 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘பெய்ரி குயீன் இ.ஐ.ஆர். 21‘ ரகத்தைச் சேர்ந்த நீராவி என்ஜின் மூலம் நேற்று காலையில் திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே ஹெரிடேஜ் ரெயில் இயக்கப்பட்டது.

நீராவி என்ஜினுடன் குளிரூட்டப்பட்ட ஒரு ரெயில் பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அதில் 35 பயணிகள் அமரும் வகையில், தனித்தனி சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நீராவி என்ஜின் மற்றும் ரெயில் பெட்டி முழுவதும் வண்ண தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது.

ஹெரிடேஜ் ரெயிலில் பயணம் செய்ய கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.500-ம், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரூ.400-ம் வசூலிக்கப்பட்டது. திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் பயணச்சீட்டு பெற்று, ஹெரிடேஜ் ரெயிலில் பயணம் செய்தனர். திருச்செந்தூர் ரெயில் நிலைய முதலாவது பிளாட்பாரத்தில் ‘ஹெரிடேஜ் ரெயில்’ இயக்க தொடக்க விழா நேற்று நடந்தது.

காலை 10.40 மணிக்கு மதுரை ரெயில்வே கோட்ட கூடுதல் பொதுமேலாளர் ஓ.பி.ஷா கொடியசைத்து ‘ஹெரிடேஜ் ரெயில்‘ போக்குவரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரெயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் ஹரி கிருஷ்ணன், போக்குவரத்து மேலாளர் சங்கர நாராயணன், வர்த்தக ஆய்வாளர் மாணிக்கம், நிலைய அதிகாரி சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஹெரிடேஜ் ரெயிலை டிரைவர் கோபாலன் இயக்கினார். அவருடன் மெக்கானிக்கல் என்ஜினீயர் விவேக் சர்மா மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடன் இருந்தனர். முதலில் விறகினை எரித்து தண்ணீரை சூடாக்குவதால் உருவாகும் நீராவி மூலம் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. தொடர்ந்து எரியூட்ட நிலக்கரியை பயன்படுத்தினர். இதற்காக ஆறுமுகநேரி, நாசரேத் ரெயில் நிலையங்களில் ஹெரிடேஜ் ரெயில் நிறுத்தப்பட்டு, நீராவி என்ஜினில் தண்ணீர் ஏற்றப்பட்டது. அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஹெரிடேஜ் ரெயில் இயக்கப்பட்டது. வழிநெடுகிலும் ஹெரிடேஜ் ரெயிலை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

ஹெரிடேஜ் ரெயிலில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, பேராசிரியர் பாலகுமார் மற்றும் 26 மாணவர்கள் பயணம் செய்தனர். மேலும் ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்களும் ஆர்வமுடன் பயணம் செய்தனர். அவர்கள் ரெயில் பயணத்தின்போது தங்களது செல்போன்களில் ‘செல்பி‘ எடுத்து மகிழ்ந்தனர்.

மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ‘ஹெரிடேஜ் ரெயில்‘ வந்தடைந்தது. நீராவி என்ஜின் செயல்படும் விதம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

ஹெரிடேஜ் ரெயிலில் பயணம் செய்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சித்ரா கூறுகையில், ‘கடந்த 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த நீராவி என்ஜின் ரெயிலில் என்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பயணம் செய்தது பெருமிதமாகவும், புதுமையாகவும் உள்ளது. இந்த நீராவி என்ஜின் ரெயிலில் இங்கிலாந்து நாட்டின் எலிசபெத் மகாராணியும் பயணம் செய்துள்ளார்.

நீராவி என்ஜின் ரெயில் செயல்படும் விதம் குறித்து என்னுடைய குழந்தைகளுக்கு விளக்கி கூறினேன். இதில் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது‘ என்றார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் பால ரத்தினகுமார் கூறுகையில், ‘நீராவி என்ஜின் செயல்படும் விதம் குறித்து ஏற்கனவே கல்லூரியில் பேராசிரியர்கள் விளக்கமாக கூறி இருந்தனர். தற்போது அதனை நேரில் பார்த்து அறிந்து கொண்டோம். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் அமைந்தது‘ என்றார்.

Next Story