தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 PM GMT (Updated: 17 Nov 2018 6:44 PM GMT)

தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேற்று காலையில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், வீடுகளில் நல்லதண்ணீர் சேமிக்கும் தொட்டிகள், சின்டெக்ஸ், டிரம்கள் ஆகியவற்றை சரியாக மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் வீட்டு மாடிகளில் பயன்படுத்தாத பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா?, கொசு புழுக்கள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் 1,450 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 450 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள், துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்கள் கொசு ஒழிப்பு பணிகளை கண்காணித்து, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தூய்மையாக பராமரிக்காத நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

கொசு உற்பத்தி செய்யும் வகையில் உள்ள நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட பொது நிறுவனங்களில் இருந்து நடப்பு மாதத்தில் இதுவரை ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்ராஜ், சுகாதார ஆய்வாளர் அரிகணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story