போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது


போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 6:51 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து, போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

திருச்சியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ஒரு தகராறு சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்தார்.

அப்போது போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்த சிந்தாமணியை சேர்ந்த மணிகண்டன்(30), காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்த கருணாகரன்(22) ஆகிய இருவரும் தகராறு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷின் சட்டையை பிடித்து தள்ளியுள்ளனர். இதைப்பார்த்த போலீஸ் தலைமை எழுத்தர் சிவராஜ் அவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிவராஜையும் தாக்கினர்.

இதில் காயமடைந்த சிவராஜை சக போலீசார் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் (பொறுப்பு) வழக்குப்பதிந்து மணிகண்டன், கருணாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் மணிகண்டன் முன்பு ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story