தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி,
பா.ம.க.வின் சார்பு அமைப்புகளான பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம் மற்றும் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.
பாட்டாளி இளைஞர்சங்க செயலாளர் முருகசாமி, துணைசெயலாளர் அன்பழகன், மாணவர்சங்க செயலாளர் செந்தில், இளம்பெண்கள் சங்க மாநில செயலாளர் சாந்தினி, சமூக ஊடகப்பேரவை மாநில செயலாளர் தயாளன், துணைத்தலைவர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் சார்பு அமைப்பு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரே கட்சி பா.ம.க. தான். தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள், இளம்பெண்களின் ஆதரவு, பணம் ஆகியவை அரசியலில் வெற்றிபெற முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றில் பணத்தை தவிர மற்ற காரணிகள் நம்மிடம் உள்ளது. இளைஞர்களின் சக்தியை சிறப்பான முறையில் பயன்படுத்தினால் நாம் இலக்கை அடைய முடியும்.
பா.ம.க.வில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பொறுப்புகளை வழங்க முடிவு செய்து உள்ளோம். தற்போது 2 ஆயிரம் பேருக்கு நேரடியாக பொறுப்புகளை வழங்க உள்ளேன். கட்சி பொறுப்பை பெறும் ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் பா.ம.க.வின் கொள்கைகளை எடுத்துக்கூறி அவர்களுடைய ஆதரவை பெற வேண்டும். இதன் மூலம் ஒவ்வொருவரும் 100 பேரில் இருந்து 300 பேர் வரை கட்சியில் புதிதாக சேர்க்க வேண்டும். குறிப்பாக படித்த பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்
சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ந்து வருகின்றன. இவற்றின் மூலம் மிகவும் விரைவான முறையில் லட்சக்கணக்கானோருக்கு தகவல்களை கொண்டு செல்ல முடியும். சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் கையாளும் கட்சியாக பா.ம.க. உள்ளது. சமூக ஊடகங்கள் மூலமாக ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சினைகள், கோரிக்கைகளை கண்டறிந்து அவற்றிக்கு உரிய தீர்வை காண பா.ம.க.வை சேர்ந்த இளைஞர்கள் தீவிரமாக பாடுபட வேண்டும். தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
இதைத்தொடர்ந்து கட்சியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்சி பொறுப்புகான நியமன கடிதங்களை டாக்டர் ராமதாஸ் வழங்கினார். இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி.க்கள் பாரிமோகன், தன்ராஜ், தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, தேவேந்திரன், பசுமை தாயகம் மாநில செயலாளர் அருள்ரத்தினம், மாநில அமைப்பு துணைசெயலாளர் சத்தியமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் இமயவர்மன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story