கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருச்சியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருச்சியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 7:58 PM GMT)

கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருச்சியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

திருச்சி,

கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திருச்சியில் கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்க பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பூசாரி கையால் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

இதேபோல் ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதில் குருசாமிகளிடம் ஆசி பெற்று அவர்களது கையால் மாலை அணிந்தனர். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜையும் தொடங்கியது. சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. விரதம் முடிவடையும்போது கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதியில் அய்யப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் காவி நிற வேட்டி உடுத்தி, துளசிமணி மாலையணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினார்கள். மாலையணிந்த அய்யப்ப பத்தர்கள் கூறுகையில், அய்யப்ப சுவாமியை நினைத்து விரதம் இருந்தால் நற்பலன்கள் கிட்டுவதாக கூறினர். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலையில் அனுமதிக்க முடியாது என்றும் பெரும்பாலான பக்தர்கள் தெரிவித்தனர்.

Next Story