‘கஜா’ புயலால் பாதிப்பு: தென்னை விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


‘கஜா’ புயலால் பாதிப்பு: தென்னை விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 17 Nov 2018 11:00 PM GMT (Updated: 17 Nov 2018 8:07 PM GMT)

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி பகுதிகளுக்கு நேற்று சென்றார்.

அங்கு புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்த அவர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் ஜி.கே.வாசன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி பகுதிகளில் பெரும்பாலானோர் தென்னை விவசாயிகள். ‘கஜா’ புயல் காரணமாக இதுவரை கண்டிராத வீழ்ச்சியை தென்னை விவசாயிகள் சந்தித்திருக்கிறார்கள். குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறினார்கள். ஒவ்வொரு தென்னந்தோப்பிலும் 20 வருடத்திற்கு முன்பு வைத்த 80 முதல் 90 சதவீதம் தென்னம் பிள்ளைகள் அடியோடு அழிந்துவிட்டது.

ஏற்கனவே மழை இல்லாத காரணத்தால் தென்னை விவசாயிகள் வறட்சியின் விளிம்பில் இருந்தார்கள். இந்தநிலையில் ‘கஜா’ தாக்கத்தால் அவர்களின் வாழ்வாதாரம் சீரழிந்துவிட்டதாக தென்னை விவசாயிகள் கூறுகிறார்கள். இதேபோன்று பல்வேறு நிலைகளில் விவசாயம் செய்பவர்கள் அவர்கள் சார்ந்த விவசாயத்தின் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தென்னை விவசாயத்தில் முதல் இடத்தை பிடிப்பது பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி தான். ‘கஜா’ புயல் காரணமாக 2 லட்சத்தில் இருந்து 2½ லட்சம் தென்னை மரங்கள் அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே அரசின் உடனடி கவனம் தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். எனவே தென்னை விவசாயிகளுக்கு ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் ரூ.15 ஆயிரம் வீதம் உடனடியாக இழப்பீடு கொடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீட்டு இன்சூரன்சு தொகைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் அரசே காப்பீட்டு தொகையை கட்ட வேண்டும். இதுதான் விவசாயிகளின் பிரதான கோரிக்கை. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் இணைப்பும் இல்லை. பட்டுக்கோட்டையின் மைய பகுதியில் உள்ள பள்ளிவாசல் புயலால் இடிந்து கிடக்கிறது. மேலும் அங்குள்ள 60 சதவீத வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்திருக்கின்றன.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அனைத்து துறைகளில் இருந்தும் பணியாளர்களை அழைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும். ‘கஜா’ புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை ரூ.25 லட்சமாக அதிகரிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.கே.வாசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூற உள்ளார்.

Next Story