சேத விவரங்களை கணக்கெடுக்காததால் ஆத்திரம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய கிராம மக்கள்


சேத விவரங்களை கணக்கெடுக்காததால் ஆத்திரம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:15 AM IST (Updated: 18 Nov 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

சேத விவரங்களை கணக்கெடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதுடன் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் வேதாரண்யம் பகுதியில் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

வேதாரண்யம்,

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளில் ஒன்று வேதாரண்யம். இங்கு விவசாயமும், மீன்பிடித்தலும் முக்கியமான தொழில்களாகும். இந்த இரண்டு தொழில்களையும் கஜா புயல் சுத்தமாக முடக்கி விட்டது. புயல், கடல் சீற்றம் காரணமாக தொடர்ந்து பல நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

நெற் பயிர்கள், மா மரங்கள், புளிய மரங்கள் புயல் காற்றில் முறிந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகளின் ஒட்டுமொத்த முதலீடும் நஷ்டமடைந்து உள்ளது. புயல் நிவாரண பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும், புயலால் பாதித்த வேதாரண்யம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நாட்களாகும் என தெரிகிறது.

வேதாரண்யம்-நாகை சாலை, வேதாரண்யம்-கரியாப்பட்டினம் சாலை, வேதாரண்யம்-வாய்மேடு சாலை, வேதாரண்யம்-கோடியக்கரை சாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் புயல் பாதிப்புகளை கணக்கெடுப்பு செய்யாமல் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நிவாரண பணிகளுக்காக வந்த அதிகாரிகளை நேற்று திருப்பி அனுப்பினர். வேதாரண்யம் அருகே உள்ள காந்தி நகர், அகஸ்தியன்பள்ளி, வெள்ளப்பள்ளம், குரவப்புலம் உள்ளிட்ட கிராமங்களில் அதிகாரிகளை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள் கூறியதாவது:-

மரங்கள், மின்கம்பங்களை சரி செய்து விட்டு, அவற்றை அதிகாரிகள் சேதமாக கணக்கிட மாட்டார்கள். சேதமதிப்பை குறைத்து காட்டுவார்கள். மரமே விழவில்லை என்று கூறி விடுவார்கள். இதனால் பாதிப்பு பொதுமக்களுக்கு தான். சேத மதிப்புகளை கணக்கீடு செய்யாமல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை விடமாட்டோம். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

அதிகாரிகளை கிராமங்களுக்குள் விடாமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பியதால் வேதாரண்யம் பகுதியில் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

Next Story