கஜா புயலால் பாதித்த பகுதிகளை தம்பிதுரை-அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து பொதுமக்கள் மறியல்


கஜா புயலால் பாதித்த பகுதிகளை தம்பிதுரை-அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:30 AM IST (Updated: 18 Nov 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் கஜா புயலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளை நேற்று காலை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் ரெத்தினவேல் எம்.பி. உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்நிலையில் மணப்பாறை அருகே உள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிகளை தம்பிதுரை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்று கூறி, அந்த பகுதி மக்கள் உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபினி, ராஜீவ்காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கருமலை அருகே உள்ள எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பூச்செடிகள், வாழை மரங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதை அதிகாரிகள் பார்வையிட வேண்டும். அதற்கான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி எண்டபுளி ஊராட்சியின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கருமலையில் காத்திருந்தனர்.

இதையடுத்து கருமலைக்கு வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, தங்கள் பகுதியில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டினர். அப்போது அழகிரிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூச்செடிகள் மற்றும் தென்னை, புளியமரம், வாழை, தேக்கு மரங்கள் சாய்ந்ததற்கும், மின் மோட்டார் கிணற்றில் விழுந்து சேதமடைந்ததற்கும் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

Next Story