அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் 100 பணியாளர்கள் சீரமைப்பு பணி


அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் 100 பணியாளர்கள் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 18 Nov 2018 4:15 AM IST (Updated: 18 Nov 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் 100 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அய்யம்பேட்டை,

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ‘கஜா’ புயல் கடந்த நேற்று முன்தினம் அதிகாலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் கஜா புயல் காரணமாக சுமார் 200 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் ஆங்காங்கே மின் கம்பிகளும் அறுந்து தொங்கியது. இதனால் அய்யம்பேட்டை நகர், புறநகர் , கணபதி அக்ரகாரம் அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைப்பட்டது. இதையடுத்து கும்பகோணம் செயற்பொறியாளர் நளினி, பாபநாசம் உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் இளம்மின் பொறியாளர்கள் மேற்பார்வையில் மின் இணைப்பு வழங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

அய்யம்பேட்டை, கணபதி அக்ரகாரம் அலுவலகங்களை சேர்ந்த நிரந்தரப் பணியாளர்கள் 50 பேர், தற்காலிக பணியாளர்கள் 20 பேர், மதுரையில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழுவினர் என மொத்தம் 100 பேர் கொண்ட பணியாளர்கள் மின் கம்பங்கள் முறிந்து விழுந்த பகுதிகளில் புதிய மின் கம்பங்களை நட்டும், அறுந்து விழுந்த மின் கம்பிகளை இழுத்து கட்டுதல் போன்ற சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த அய்யம்பேட்டை நகர பகுதிக்கு நேற்று முன்தினம் இரவே மின் இணைப்பு வழங்கப்பட்டது. நேற்று பசுபதி கோவில், சூலமங்கலம், சக்கரப்பள்ளி, மாகாளிபுரம் ஆகிய ஊர்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது . இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பணியாளர்கள் தொடர்ந்து மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இன்று மாலைக்குள் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Next Story