சிவகிரி அருகே லாரி மீது விழுந்த ஆலமரம் போக்குவரத்து பாதிப்பு
சிவகிரி அருகே லாரி மீது ஆலமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகிரி,
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு ஜல்லி கற்கள் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி நேற்று காலை 9 மணி அளவில் சிவகிரி அருகே விளக்கேத்தி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்ற ஆலமரம் வேரோடு சாய்ந்து லாரி மீது விழுந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டிவந்த டிரைவர் சிறு காயத்துடன் உயிர்தப்பினார். மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் லாரி மீது விழுந்த கிடந்த மரம் மற்றும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் லாரி மீட்டகப்பட்டது. இதைத்தொடர்ந்து 9.30 மணி அளவில் வாகனங்கள் செல்லத்தொடங்கின.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், ‘சிவகிரி அருகே ஈரோடு–முத்தூர் ரோட்டின் ஓரத்தில் ஏராளமான மரங்கள் பட்டுப்போய் எந்தநேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அதனால் சாலையோரங்களில் நடந்து செல்ல அச்சப்படுகிறோம். எனவே ஆபத்தாக சாலையோரத்தில் காணப்படும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.