சுற்றுலா பயணிகள் வருகை இல்லை: நாடுகாணி தாவரவியல் பூங்கா வெறிச்சோடியது
சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், நாடுகாணி தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் இங்குள்ள மக்கள் பொழுதுபோக்கு அம்சங்களை தேடி கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு குடும்பத்துடன் சென்று வருகின்றனர். கூடலூர் பகுதியில் சுற்றுலா தலங்கள் உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கூடலூர் அருகே நாடுகாணியில் வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 321 ஹெக்டேர் பரப்பளவில் வனத்தின் இயற்கை காட்சியை காணும் வகையில் காட்சிமுனை கோபுரம், அரிய தாவரங்களின் திசு வளர்ப்பு மையம், ஆராய்ச்சி கூடம், பெரணி இல்லம், ஆர்க்கிட்டோரியம், வனவிலங்குகளின் உடற்பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் இருக்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு சிறந்த கல்வி சுற்றுலாவாகவும் தாவரவியல் பூங்கா விளங்கி வருகிறது.
கூடலூர்– கேரள எல்லையில் தாவரவியல் பூங்கா உள்ளதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால் தாவரவியல் பூங்காவுக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கிடையே சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனத்துறையினர் பல லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் தாவரவியல் பூங்கா புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளும் தாவரவியல் பூங்காவுக்குள் வர வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இதற்காக நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா மற்றும் இயற்கை காட்சிகளை காண வந்தனர். இதனால் நாடுகாணி பகுதி வியாபாரிகள் வணிக ரீதியாக பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழைக்கு பிறகு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் இன்றி தாவரவியல் பூங்கா வெறிச்சோடி கிடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கூறியதாவது:–
தாவரவியல் பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியதால் தினமும் ஏராளமானவர்கள் வந்து சென்றனர். இதனால் வணிகம் நன்றாக இருந்தது. அதன்பின்னர் பலத்த மழை, போலீசார் கெடுபிடி உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதனால் வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவும் வெறிச்சோடி கிடக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்வதற்கான சூழலை உருவாக்கினால் மட்டுமே இப்பகுதி வளர்ச்சி பெறும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.