பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கில இலக்கணத்தை கதை வடிவில் கற்று தரும் பட்டதாரி முதியவர்


பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கில இலக்கணத்தை கதை வடிவில் கற்று தரும் பட்டதாரி முதியவர்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:45 AM IST (Updated: 18 Nov 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

ஜக்கனாரையை சேர்ந்த பட்டதாரி முதியவர் ஒருவர், பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கில இலக்கணத்தை கதை வடிவில் கற்று தந்து வருகிறார்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே ஜக்கனாரையை சேர்ந்தவர் மாதன்(வயது 73). பி.எஸ்சி பட்டதாரியான இவர், விவசாயம் செய்து வருகிறார். மேலும் பொழுதுபோக்காக பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லும் வழக்கத்தையும் கொண்டுள்ளார். அவ்வாறு கதை கேட்க வரும் குழந்தைகளிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்ய தூண்டும்படியான கருத்துகளை விதைத்து வந்தார். தற்போது எளிமையான முறையில் கதை வடிவில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்து வருகிறார். பொதுவாக ஆங்கிலம் கற்க வாருங்கள் என்றாலே குழந்தைகள் மத்தியில் ஒருவித அச்சம் எழும். ஆனால் அதை கதை வடிவில் குழந்தைகளுக்கு விளக்கி கூறினால், வெற்றி காண முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டியுள்ளார். ஆங்கில இலக்கணத்தை கதை வடிவில் சொல்லி தருவதால், பள்ளி குழந்தைகளும் அவரிடம் கதை கேட்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து மாதன் கூறியதாவது:–

குழந்தைகளுக்கு கதை சொல்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. கற்பனை கதைகளால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால், பயனுள்ள வகையில் ஏதாவது சொல்லி கொடுக்க முடிவு செய்தேன். அந்த கதைகள் குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே எனது நோக்கம். இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் உள்ள சில கடினமான ஆங்கில இலக்கண பகுதிகளை செவிக்கினிய கற்பனை கதைகளை போல வடிவமைத்து சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன். குழந்தைகளும் அந்த கதைகளை ஆர்வத்துடன் கேட்பதுடன், எளிதில் புரிந்து கொள்கின்றனர்.

தற்போது ‘புரோநவுன்(pronoun)‘ என்ற ஆங்கில இலக்கண பகுதி உள்பட 4 பகுதிகளை கதைகளாக வடிவமைத்து கற்று கொடுத்து வருகிறேன். தொடர்ந்து ஆங்கில இலக்கணத்தின் பிற பகுதிகளையும் கதைகளாக வடிவமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். இது மட்டுமின்றி தண்ணீரின் அவசியம், சிக்கம் குறித்து கவிதைகள் இயற்றி அவற்றின் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். இதனால் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வெடுக்கும் வயதிலும் அலைபோல ஓயாது குழந்தைகளுக்கு நல்லவைகளை கதைகளாக கற்று தரும் மாதனின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story