குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு


குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Nov 2018 11:39 PM GMT (Updated: 17 Nov 2018 11:39 PM GMT)

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், குற்றப் பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமிக்கு அக்கறை இல்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக குமாரசாமி கூறி வருகிறார். ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தி வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன. கடனை செலுத்தாத விவசாயிகளுக்கு கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கிறது..

ஆனால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறுகிறார். இதனை விவசாயிகள் நம்ப மாட்டார்கள். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை வழங்காமல் உள்ளதால், பெலகாவியில் விவசாயிகள் தொடர் போராட்டத்்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவது அதிகரித்துவிட்டது. குற்றப்பிரிவு போலீசாரை மாநில அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்ட விவகாரம். இந்த விவகாரத்தில் ஜனார்த்தனரெட்டிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனார்த்தனரெட்டி தன் மீதான வழக்கை கோர்ட்டில் சந்தித்து கொள்வார். அவர் தவறு செய்திருந்தால் கோர்ட்டு தண்டனை வழங்கும்.

அதே நேரத்தில் ஜனார்த்தனரெட்டி விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீசார் நடந்து கொண்ட விதம் தவறானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதல்-மந்திரி குமாரசாமி சொல்வதையே கேட்டு குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். போலீசார் சுயமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story