முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்க தயார் : பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி


முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்க தயார் : பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 5:12 AM IST (Updated: 18 Nov 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

கட்சி மேலிடம் கொடுத்த பொறுப்புகளை திறமையாக நிர்வகித்துள்ளேன் என்றும், முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்க தயாராக இருப்பதாகவும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெலகாவியில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 6 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கர்நாடகத்தில் போலீஸ் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போலீஸ் துறையில் காலியாக உள்ள பணி இடங்கள் நிரப்பப்படும். போலீசாருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படு்ம்.

நான் மாநில தலைவராக இருந்தபோது, எனது தலைமையில் சட்டசபை தேர்தலை 2 முறை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. ஒரு முறை மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது. தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. எனக்கு கட்சி மேலிடம் துணை முதல்-மந்திரி பதவியை அளித்துள்ளது. துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து கொண்டு, எனது சக்தியை மீறி திறமையாக செயல்பட்டு வருகிறேன்.

கட்சி மேலிடம் எனக்கு எந்த பொறுப்புகளை கொடுத்தாலும், அதனை திறமையாக நிர்வகித்துள்ளேன். கட்சி மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினாலும் ஏற்க தயாராக உள்ளேன். எந்த விதமான பொறுப்புகளையும் வழங்காவிட்டாலும், அதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். கட்சி எடுக்கும் அனைத்து முடிவுக்கும் கட்டுப்படுவேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக குமாரசாமியே இருப்பார் என்று ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதனால் துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர் இருந்து வரு கிறார். இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்க தயாராக இருப்பதாக பரமேஸ்வர் கூறி இருப்பது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சித்தராமையாவும் மீண்டும் முதல்-மந்திரியாக ஆவேன் என்று கூறி வருகிறார். தற்போது பரமேஸ்வரும் முதல்-மந்திரி பதவியை ஏற்க தயார் என்று சொல்லி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story