சேலம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி அடித்துக்கொலை மனைவி போலீசில் சரண்


சேலம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி அடித்துக்கொலை மனைவி போலீசில் சரண்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 18 Nov 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

கருப்பூர்,

சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு பார்வதிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு ரித்திகா (7), சினேகா (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வகுமார் வேலையை விட்டு நின்று விட்டார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி செல்வகுமார் திடீரென மாயமானார். இதைத்தொடர்ந்து அவருடைய உறவினர்கள் 5 நாட்களாக தேடியும், செல்வகுமார் கிடைக்கவில்லை.

இதுகுறித்து 15-ந் தேதி செல்வகுமாரின் தந்தை மாது, தாய் பாப்பா ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். அதற்கு ஐஸ்வர்யா, வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக சென்றுள்ளார் என்று தெரிவித்தார். ஆனால் இந்த பதிலில் திருப்தி ஏற்படாததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. செல்வகுமார் மாயமானது குறித்து ஏன்? போலீசில் புகார் தெரிவிக்கவில்லை என கேட்டு விட்டு சென்றனர்.

இதையடுத்து 15-ந் தேதி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார். அதில், என் கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும் கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று செல்வகுமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் உள்ளே எட்டி பார்த்தனர். இதனிடையே ஐஸ்வர்யா தனது கணவர் செல்வகுமார், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாக கூறி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் ஓமலூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் ஒரு மணி நேரம் போராடி செல்வகுமார் உடலை மீட்டனர். செல்வகுமார் கழுத்தில் காயமும், முகம் சிதைந்த நிலையிலும் கோரமாக காணப்பட்டது. பின்னர் செல்வகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, ஐஸ்வர்யா கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த செல்வகுமார் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா, செல்வகுமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கணவருக்கு சரியாக உணவு கொடுக்காமல் இருந்து வந்தார். பின்பு செல்போனில் கள்ளக்காதலனுடன் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் செல்வகுமாரை கொலை செய்ய ஐஸ்வர்யா, கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்பேரில் கடந்த 10-ந் தேதி ஐஸ்வர்யா மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் சேர்ந்து செல்வகுமாரை அடித்துக்கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் கிணற்றில் உடலை வீசி உள்ளனர். தொடர்ந்து ஒன்று தெரியாதது போல் ஐஸ்வர்யா இருந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரது கள்ளக்காதலன் யார்? என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும் ஐஸ்வர்யாவின் கள்ளக்காதலன், கொலைக்கு உடந்தையாக இருந்தவர் என 2 பேரை போலீசார் பிடித்து மறைமுகமான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story