குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ. வீடு முற்றுகை பேராவூரணியில் பரபரப்பு


குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ. வீடு முற்றுகை பேராவூரணியில் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில், குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ. வீடு முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேராவூரணி,

‘கஜா’ புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் உருக்குலைந்து காட்சி அளிக்கின்றன. பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். இந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ஜெனரேட்டர் உதவியுடன் பேராவூரணி பேருராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு, ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று குடிநீர் கேட்டு பேராவூரணி-சேதுபாவாசத்திரம் சாலையின் குறுக்கே பொதுமக்கள் மரக்கிளைகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3 மணி நேரம் நடந்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பேராவூரணியில் உள்ள கோவிந்தராசு எம்.எல்.ஏ. வீட்டை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குடிநீர் மற்றும் மின் வினியோகத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதையடுத்து கோவிந்தராசு எம்.எல்.ஏ., வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பேராவூரணி தொகுதியில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்போனில் நேரடியாக பேசி உள்ளேன். முதல்-அமைச்சரும் பாதிப்பு விவரங்களை முழுமையாக கேட்டுள்ளார்.

பேராவூரணி தொகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் கிடைக்கும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் போலீசாரும் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story