கஜா புயலின் கோர தாண்டவத்தால் வீடுகள், மரங்கள் சேதம்: வளர்ச்சியில் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற கிராமங்கள்


கஜா புயலின் கோர தாண்டவத்தால் வீடுகள், மரங்கள் சேதம்: வளர்ச்சியில் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற கிராமங்கள்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலின் கோர தாண்டவத்தால் வீடுகள், மரங்கள் கடுமையான சேதம் அடைந்தன. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் வளர்ச்சியில் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று உள்ளன. இந்த புயலால் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டது. இந்த புயல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இந்த புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இந்த புயல் மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டு விட்டது. நாகையை அடுத்த வடக்குப்பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், காமேஸ்வரம், திருப்பூண்டி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வானவன் மாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், செம்போடை, தோப்புத்துறை, பெரிய குத்தகை, கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, அகஸ்தியம்பள்ளி, தலை ஞாயிறு, பழையாற்றங்கரை, முதலியப்பன் கண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. சாலையோரங்களில் உள்ள வீடுகளும், மரங்களும் பெரிதும் சேதம் அடைந்தன. மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தன. இந்த பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.

விழுந்தமாவடி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை சுற்றிலும் ஏராளமான தென்னை மரங்கள், மாமரங்கள், புளியமரங்கள், பனை மரங்கள் இருந்தன. இந்த மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்தன. குடிசை வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த ஓடுகள் பெயர்ந்து விழுந்தன.

இந்த பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதனால் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவிக்கிறார்கள். கடல் நீர் புகுந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களின் படகுகளும் கடற்கரையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சேதமடைந்து காணப்படுகின்றன. விழுந்தமாவடி மணல்மேடு வடக்கு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து இந்த பகுதி மக்கள் கூறுகையில், புயலின் சேதத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளோம். இப்பகுதி கிராமங்களின் வளர்ச்சி 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. விழுந்தமாவடி கிராமத்தில் சேதமடையாத வீடுகளே இல்லை எனலாம். எங்களுக்கு தேவையான வசதிகளை நாங்களே செய்து வருகிறோம். அதிகாரிகள் யாரும் வந்து பார்ப்பதில்லை என்றனர்.

நாகையில் இருந்து வேதாரண்யம் வரையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடற்கரை பகுதிகளில் இருந்த சவுக்கு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் கிராம மக்கள் நிற்கதியாக உள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கி காணப்படுகிறது. கோவில் பத்து கிராமத்தில் ஆசியாவிலேயே பெரிய நெல் சேமிப்பு கிடங்கு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதற்குள் முற்றிலும் சேதமடைந்து விட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கிராம மக்கள் தங்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை-வேதாரண்யம் சாலையில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story