நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்- போலீசார் இடையே மோதல் 11 போலீசார் படுகாயம்


நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்- போலீசார் இடையே மோதல் 11 போலீசார் படுகாயம்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:15 PM GMT (Updated: 18 Nov 2018 6:46 PM GMT)

வேதாரண்யம் அருகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்,

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நாகையில் இருந்து வேதாரண்யம் வரையில் உள்ள அனைத்து கிராமங்களும் கடும் அழிவை சந்தித்துள்ளன. இந்த பகுதியில் மக்கள் குடிநீர், மின்சாரம் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என கூறி பல்வேறு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று மாலை வேதாரண்யம் அருகே தலைஞாயிறு அடுத்து உள்ள முதலியப்பன்கண்டி அருகேயும் கிராம மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை கண்டித்து ஆலங்குடி-வேட்டைக்காரனிருப்பு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நாகை மாவட்டத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற போலீசார், சாலையின் குறுக்கே போடப்பட்டு இருந்த மரக்கட்டைகளை அகற்ற முயன்றனர். அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் பொதுமக்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டத்தில் போலீஸ்காரர்கள் ரஞ்சித், சைமன்ராஜ், அரிகிருஷ்ணன், அஸ்லாம், சதீஷ்குமார், அருண், ரகோத்தமன், அருண்குமார், கணபதி, நிலவரசன், முத்துக்குமார் ஆகிய 11 பேருக்கு தலை, கை கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. 2 பேருக்கு மண்டை உடைந்தது.

இதையடுத்து காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக நாகையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story