தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர்கள் அறிவிப்பு


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 6:57 PM GMT)

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் உள்ள மரங்களும் சாய்ந்து விட்டன. இவற்றில் பல பள்ளிகளில் இன்னும் மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் சில பள்ளிகளில் கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் 3 மாவட்டங்களில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் உள்ள 413 பள்ளிகளுக்கும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 510 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது. தனியார் மற்றும் அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தான் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வர வேண்டும். தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி இன்று நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொருத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கும் முடிவை எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணி நடை பெறுவதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது. ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிகளுக்கு வந்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story