தூத்துக்குடியில் பல்வகை வாகன நிறுத்த முனையம் மார்க்கெட் பகுதியில் அமைகிறது


தூத்துக்குடியில் பல்வகை வாகன நிறுத்த முனையம் மார்க்கெட் பகுதியில் அமைகிறது
x
தினத்தந்தி 19 Nov 2018 3:30 AM IST (Updated: 19 Nov 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 மார்க்கெட்டுகள் அமைந்துள்ள பகுதியில் பல்வகை வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சி பகுதிகளில் 2 இடங்களில் பல்வகை வாகன நிறுத்த முனையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பூமார்க்கெட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2 ஆயிரத்து 411 சதுர மீட்டர் பரப்பளவிலும், சிதம்பரநகர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3 ஆயிரத்து 470 சதுரமீட்டர் பரப்பளவிலும் பல்வகை வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட உள்ளது.

ஜெயராஜ் ரோடு பூமார்க்கெட் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 3 தளத்திலும், சிதம்பரநகர் மார்க்கெட் பகுதியில் ரூ.15.33 கோடி மதிப்பீட்டில் 3 தளத்திலும் அமைக்கப்படுகிறது. இங்கு தரை தளத்தில் 4 கடைகள், 2 கழிப்பறை வசதியுடனும், முதல் தளத்தில் 12 கடைகள், 2 கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த 2 தளங்களில் 110 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட உள்ளது. 2-வது மற்றும் 3-வது தளங்களில் 4 சக்கர இலகுரக வாகனங்கள் 100 எண்ணம் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட உள்ளது.

மேற்படி வாகன நிறுத்துமிடத்திற்கு பொது மக்கள் தங்கள் வாகனங்களை இலகுவாக கொண்டு செல்ல ஒவ்வொரு தளத்திலும் சாய்வுதளம் அமைத்து வாகனம் ஏறுமிடம் ஒரு பக்கத்திலும், இறங்குமிடம் ஒரு பக்கத்திலும் கட்டப்பட உள்ளது. மேலும் பொது மக்கள் மற்றும் வயோதிகர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்ல ஏதுவாக மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன், நடந்து செல்ல மாடிப்படிகளும் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் மாநகரத்தின் மேற்படி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன், பொது மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பான முறையில் நிறுத்த ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story