பொள்ளாச்சி– கோவை இடையே இணைப்பு சாலை அமைக்கும் முன் வழிகாட்டி பெயர் பலகை; வாகன ஓட்டிகள் குழப்பம்


பொள்ளாச்சி– கோவை இடையே இணைப்பு சாலை அமைக்கும் முன் வழிகாட்டி பெயர் பலகை; வாகன ஓட்டிகள் குழப்பம்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி– கோவை இடையே நான்கு வழிச்சாலையில் இணைப்பு சாலை அமைக்கும் முன் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு,

கோவை– பொள்ளாச்சி இடையே நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணி 2019–ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்க நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கிணத்துக்கடவு பகுதியில் பணிகள் நிறைவுபெற்றதால் நான்கு வழிச்சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கி விட்டது.

தற்போது இந்த ரோட்டில் மின்கம்பங்கள் நடுவது, சாலையோரம் மழைநீர் வடிகால் அமைப்பது போன்ற பணி நடந்து வருகிறது. அதேபோல் கோவை– பொள்ளாச்சி இடையே சாலை பணிகள் முடிந்த பகுதிகளில் ஊர் பெயர் எழுதப்பட்ட பதாகைகள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.

பொள்ளாச்சி– கிணத்துக்கடவு இடையே உள்ள கோவில்பாளையம், தாமரைக்குளம் மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடிபிரிவு, சொலவம்பாளையம் பிரிவு போன்ற பகுதிகளில் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து ஊருக்குள் வாகனங்கள் செல்ல இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்க வில்லை.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ஊருக்கு வரும் வழியில் கோதவாடி பிரிவில் கோயம்புத்தூருக்கு நேராகவும் கிணத்துக்கடவுக்கு இணைப்பு சாலை வழியாகவும் செல்லவும் என வழிகாட்டு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் இருந்து கிணத்துக்கடவுக்கு செல்ல இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்காத நிலையில் இதுபோன்று பெயர் பலகை வைத்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வாகனங்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாமல் மேம்பாலத்தை கடந்து செல்ல வசதியாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் கோவை– பொள்ளாச்சி மெயின்ரோட்டில் சொலவம்பாளையம் பிரிவில் வைக்கப்பட்டு இருக்கும் வழிகாட்டி பலகையில் பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் மீதும், கிணத்துக்கடவு செல்லும் வாகனங்கள் இணைப்பு சாலையில் செல்ல வேண்டும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாலையையும், பாலத்தை இணைக்கும் பணியில் பணி நடந்து வருகிறது. பணி முடிவதற்கு முன்பு இதுபோன்று பெயர் பலகை வைத்து இருப்பது ஆபத்தை ஏற்படும். இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தில் ஏறினால் மறுபுறம் இறங்க முடியாது. இந்த போன்ற சூழ்நிலையில் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. எனவே இணைப்பு சாலைகள் முழுமையாக போடப்பட்ட பின்னர் ஊர் பெயர் பலகைகளை வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுவதை தடுக்கலாம்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கோவை– பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சசாலை அமைக்கும் பணிகள் முடியும் முன்னரே ஊர் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. கோதவாடி பிரிவு, சொலவம்பாளையம் பிரிவு பகுதிகளில் ஊர் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதை நம்பி கிணத்துக்கடவு பாலத்தில் ஏறினால் ஆபத்துதான். எனவே ஊர் பெயர் பலகைகளை மேம்பால பணிகள் மற்றும் இணைப்பு சாலைகள் முடிந்ததும் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story