கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேரும்,, வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் பெரியசாமியின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பெரியசாமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பெரியசாமியை பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி சரஸ்வதி (43). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் சரஸ்வதியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சரஸ்வதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்லை சேர்ந்தவர் சொர்ணவேல். இவருடைய மனைவி ஆவுடைதங்கம் ( 47). இவர், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 14–ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை ஆவுடைதங்கம் பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் ஓட்டாங்காட்டை சேர்ந்தவர் அந்தோணி (63). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு டாக் டர்கள் அந்தோணியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே அந்தோணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அந்தோணியை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கோவை சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (75). இவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 51 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 80 பேரும் என மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.