கோவை அருகே இந்து மகா சபை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை அருகே இந்து மகா சபை நிர்வாகி வீட்டில் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசினர்.
துடியலூர்,
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஆண்டாள் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 48). இவர் அகில பாரத இந்து மகா சபை அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மனைவி கவிப்பிரியா, மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் இவரது வீட்டு முன்பு ‘டமார்’ என்று பலத்த சத்தம் கேட்டது. உடனே சுபாஷ் மற்றும் குடும்பத்தினர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டு கதவு மற்றும் வளாகத்தில் உள்ள நாய்க்கூண்டு அருகே 2 பெட்ரோல் குண்டுகள் சிதறிக் கிடந்தன. கதவு அருகே உள்ள சுவற்றில் தீப்பற்றி கருகிய நிலையில் இருந்தது.
இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங் களை பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட உடனேயே தீப்பற்றி அணைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட வில்லை. பெட்ரோல் குண்டுகள் வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சுபாஷ் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்?. முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.
Related Tags :
Next Story