நல்ல விலை கிடைப்பதால் தரமான பச்சை தேயிலையை பறிக்க விவசாயிகள் ஆர்வம்


நல்ல விலை கிடைப்பதால் தரமான பச்சை தேயிலையை பறிக்க விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:15 PM GMT (Updated: 18 Nov 2018 7:18 PM GMT)

நல்ல விலை கிடைப்பதால், தரமான பச்சை தேயிலையை பறிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான சிறு விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை சிறு தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்து கொள்கின்றன. இதற்கு வார விலை மற்றும் மாத விலை ஆகிய 2 முறைகளில் விலை நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. கோத்தகிரி தாலுகாவிலும், குன்னூர் தாலுகாவின் ஒரு பகுதியிலும் உள்ள சிறு விவசாயிகளுக்கு வார விலை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதன்படி வார விலையாக பி பிரிவு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தரமான ஏ பிரிவு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.25, பி(பிளஸ்) பிரிவு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.22 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் குறித்து குன்னூர் தாலுகா சிறு விவசாயிகள் கூறியதாவது:–

சாதாரண வகையான பி பிரிவு பச்சை தேயிலைக்கு வார விலையாக கிலோவுக்கு ரூ.17 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தரமான ஏ பிரிவு மற்றும் பி(பிளஸ்) பிரிவு பச்சை தேயிலை கிலோவுக்கு முறையே ரூ.25, ரூ.22 என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான சிறு விவசாயிகள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. நல்ல விலை கிடைப்பதால், தரமான பச்சை தேயிலையை பறிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அனைத்து விவசாயிகளிடமும் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story