‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் திரட்டி வழங்குவேன் நடிகை ரோகிணி பேட்டி
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் திரட்டி வழங்குவேன் என்று நடிகை ரோகிணி கூறினார்.
நெல்லை,
எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் தமிழ் மாநில 7-வது மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கல்பனா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நடிகை ரோகிணி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாலியல் வன்முறை என்பது உடலால் மட்டுமல்ல ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை ஆண் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே உணர்த்தவேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீ டூ வந்த போது எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் மீது குற்றச்சாட்டு வந்தது. பொதுவாக ஆண் குழந்தைகள் தாமதமாக வீட்டிற்கு வந்தால் நாம் கவலைப்படுவதில்லை. ஆனால் பெண் குழந்தைகள் தாமதமாக வந்தால் கவலைப்படுகிறோம். இதிலேயே ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை ஒரே நாளில் சரி செய்ய இயலாது. ஆனால் இதை நாம் படிப்படியாக சரி செய்ய வேண்டும்.
சினிமாத்துறை மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் பிரச்சினை உள்ளது. இதை தங்களுடைய பொருளாதார சூழ்நிலைக்காக சிலர் பொறுத்துக்கொண்டு வாழ்க்கையில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பணிபுரியும் இடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை பற்றி நான் நடித்த மகளிர் மட்டும் படத்தில் கூறப்பட்டு உள்ளது. பெண்களுக்கான பாலியல் பிரச்சினை இந்தியாவில் மட்டும் அல்ல மேலைநாடுகளிலும் உள்ளது. அதற்கு தீர்வு காண அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் நிர்வாகிகள் கிரிஜா, குன்னிகிருஷ்ணன், செந்தில்குமார், கற்பகம், விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நடிகை ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில் ‘கஜா’ புயலால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயலால் வாழை பயிர் சேதம் அடைந்ததால் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனைக்கு உரியதாகும். இது போன்ற விபரீத முடிவுகளை எந்த விவசாயியும் மேற்கொள்ளக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எனது சொந்த முயற்சியில் நிவாரணம் திரட்டி வழங்குவேன்‘ என்றார்.
Related Tags :
Next Story