அந்தியூர் வனப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்டு விலங்குகள்


அந்தியூர் வனப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்டு விலங்குகள்
x
தினத்தந்தி 19 Nov 2018 3:45 AM IST (Updated: 19 Nov 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகளின் நடமாட்டம் குறித்து கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெறும். வனவிலங்குகளின் கால்தடம், எச்சத்தை வைத்து கணக்கிடுவார்கள்.

ஆனால் சில நேரங்களில் இந்த கணக்கெடுப்பு தவறாகிவிடுகிறது. எனவே சரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள வனத்துறையினர் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும் தாமரைக்கரை உள்பட 450 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதில் வனவிலங்குகள் பதிவாகி உள்ளதா? என்று 15 நாட்களுக்கு ஒரு முறை பார்ப்பார்கள்.

அதன்படி தாமரைக்கரை மலைக்கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கேமரா காட்சிகளை வனத்துறையினர் பார்த்தனர். அப்போது அதில் பல்வேறு வனவிலங்குளின் நடமாட்டம் பதிவாகியிருந்தது. யானை, புலி, மான், கடமான், குள்ளநரி, முள்ளெலி, செந்நாய், ஆகிய வனவிலங்குகள் கேமராவில் சிக்கின. அதுவும் இரவு 11 மணிக்கு மேல் நீர்நிலைகளுக்கு தண்ணீர் குடிக்க வரும்போது இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்த கேமரா பதிவுகள் மாவட்ட வன அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அதை பார்த்து அந்தியூர் வனப்பகுதியில் எத்தனை விலங்குகள் உள்ளது? என்பதை அறிவிப்பார். தொடர்ந்து வனப்பகுதியின் மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளார்கள்.


Next Story