கூட்டுறவு வாரவிழா: 1,352 பேருக்கு ரூ.17¼ கோடி கடன் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்


கூட்டுறவு வாரவிழா: 1,352 பேருக்கு ரூ.17¼ கோடி கடன் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வார விழாவையொட்டி 1,352 பேருக்கு ரூ.17¼ கோடி கடன் உதவியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.

ஈரோடு,

அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14–ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர். ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்கள்.

இதில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் நடந்த பேச்சு, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 13 மாணவ–மாணவிகளுக்கும், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட எலவமலை கூட்டுறவு கட்டிட சங்கம் உள்பட மொத்தம் 52 கூட்டுறவு சங்கங்களுக்கும் கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கால்நடைகள் வாங்குவதற்கான கடன், பயிர்க்கடன், சுயஉதவிக்குழு கடன், விவசாய நகைக்கடன், வீட்டுவசதிக்கடன் உள்பட பல்வேறு கடன் உதவியாக மொத்தம் 1,352 பேருக்கு ரூ.17 கோடியே 24 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

விழாவில் ஈரோடு மாவட்ட ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மேலாண்மை இயக்குனர் ராமதாஸ் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி, ஆவின் மத்திய கூட்டுறவு வங்கி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

கூட்டுறவு வாரவிழா ஈரோட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக அவருடைய ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘பெருந்துறை தொகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கட்சி பணியிலும், ஆட்சி பணியிலும் பெருந்துறை தொகுதி நிராகரிக்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிகமான வாக்குகள் பெற்றன. இந்தநிலையில் பெருந்துறை தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணி தொய்வு அடைந்ததால் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். மேலும், பெருந்துறை தொகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், நிலவள வங்கி, நெசவாளர் வங்கி உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை’’, என்றனர்.


Next Story