3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

செங்குந்தர் கல்வி கழக பவள விழா நேற்று ஈரோட்டில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

வருகிற கல்வி ஆண்டு முதல் அரசின் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ –மாணவிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களை மிஞ்சுகின்ற அளவிற்கு சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டு, 4 சீருடைகள் வழங்கப்படும். 6 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்காக, 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி செய்து கொடுக்கப்படும். அதற்கான பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். இதற்காக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தாங்கள் வகுப்பறையில் சரியாக கற்க முடியவில்லை என்றால் ‘யு–டியூப்’ முறையில் மீண்டும் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆன்லைன் மூலம் 26 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 413 தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3 மாதங்கள் தான் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியின் மூலமாக 1,000 பேர் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்கள் டாக்டர்களாக வருவதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ஒவ்வொரு துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த அரசை பொறுத்தவரை எந்த பள்ளிக்கூடங்களையும் மூடும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் 2, 3 மாணவர்கள் இருந்தால் அதன் நிலை என்ன என்பதை ஆசிரியர் சங்கங்கள் தான் எங்களுக்கு சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியருக்கு எவ்வளவு செலவு ஆகிறது. அதில் இருக்கிற அமைப்பாளர்களுக்கு எவ்வளவு செலவாகிறது. 2 மாணவர்கள் படித்தால் ஒரு ஆண்டுக்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.

எல்லா பள்ளிக்கூடங்களிலும் ஏழை, எளிய குழந்தைகளை அழைத்து வந்து படிக்க வைக்க வேண்டும். அதற்கான ஆக்கத்தையும், ஊக்கத்தையும் இந்த சங்கங்கள் செய்ய வேண்டும்.

‘கஜா’ புயலால் ஒரு சில இடங்களில் பள்ளிக்கூட பாட புத்தகம் சேதம் அடைந்தாக கூறப்படுகிறது. எவ்வளவு பாடப்புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளது என்பதை நான் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் தான் கூறமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது, ‘தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் முன்னாள் முதல் –அமைச்சர் எம்.ஜி.ஆர். தான். அவர் பல தனியார் கல்வி நிறுவனங்களை திறந்து வைத்துள்ளார். இதன் காரணமாக தற்போது ஏராளமானோர் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ –மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன’ என்றார்.


Next Story