‘கஜா’ புயல் பாதிப்புகளை சரி செய்ய ஈரோடு மாவட்டத்தில் இருந்து 400 மின் ஊழியர்கள் பயணம்
‘கஜா’ புயல் பாதிப்புகளை சரி செய்ய ஈரோடு மாவட்டத்தில் இருந்து 400 மின் ஊழியர்கள் சென்றுள்ளனர்.
ஈரோடு,
தமிழகத்தில் ‘கஜா’ புயல் காரணமாக கடலூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
மின்வாரிய அறிக்கைபடி, 102 துணை மின் நிலையங்கள், 29 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மின் ஊழியர்கள் சென்றுள்ளனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 400–க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
‘கஜா’ புயல் காரணமாக 7 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனை சரிசெய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் விரைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் 400–க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு தங்கி இருந்து மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏராளமான தளவாட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.